Monday, January 31, 2011

மனுஷ்ய புத்திரன்

ஒரு காதலை தெரிவிக்கும்போது .....


ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி
தன் காதலை தெரிவிக்கிறாள்

அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்
அல்லது ஒவ்வொரு காதலையும்
தெரிவிக்கும்போதும்
அவள் அவ்வளவு
குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்

உண்மையிலேயே அது
புத்தம் புதியதாக இருந்தது
அப்போதுதான் உறையிலிருந்து
பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை
அ து நினைவூட்டுகிறது

அவளுக்கு ஒரு காதலை
எப்படித் தெரிவிக்கவேண்டும்
என்பதுகூட தெரிந்திருக்கவில்லை
அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்
அம்மாவைப்பற்றி பேசினாள்
பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்
ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்

அவள் விரும்பியதற்கு
நேர் எதிரானதையே
அவள் பேசினாள்

அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று
அவள் அஞ்சினாள்
ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது
மிகவும் வியப்படைகிறாள்

தற்செயலாக திறந்துவிட்ட
ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்
அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்

அதைச் சொல்லும்போது அவளுக்கு
அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே
நினைவுக்கு வரவில்லை

அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக
கையாளவே அவள் விரும்பினாள்
ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல
அதைக் கையாண்டாள்

ஒரு காதலைத் தெரிவிப்பது
இன்னொரு மனிதனை முழுமையாக
சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது
அவள் அதை முதலில்
ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்
ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது

ஒருவரை முழுமையா சந்திப்பது
அவ்வளவு பாரமானது என்று
அவள் யோசித்ததே இல்லை

அவள் திரும்பிப்போக விரும்பினாள்
அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்
மூச்சுவிட வேண்டும்போல இருந்தது
ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை

அவள்
எல்லாவற்றையும்முழுமையாக
நம்பவிரும்பினாள்
எல்லாவற்றையும் முழுமையாக
சந்தேகிக்க விரும்பினாள்
தனக்கு யோசிக்க
வேறு விஷயஙகளே இல்லையாஎன்று
அவளுக்கு எரிச்சலாக இருந்தது
ஆனால் அவள் அதையே யோசித்தாள்

ஒரு சிறுபெண்
தனது காதலை தெரிவிக்கும்போது
அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்

இந்த உலகத்தின் மீது வைக்கும்
கடைசி நம்பிகையைப்போல
கருணையின்மைகளுக்கு முன்னே
ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது

மனுஷ்ய புத்திரன்

No comments: